சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வனத் துறையினர் வனவிலங்குள் மற்றும் பறவைகள் வேட்டையாடுவதைத் தடுக்க துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
விருதுநகர் வனமண்டலம், சிவகங்கை வனக் கோட்டத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் வனச் சரகத்தில் வேட்டங்குடிப் பறவைகள் சரணாலயம் மற்றும் பிரான்மலை மண்மலை, மாமலை, கம்பனூர் ஆகிய பகுதிகளில் மான், முயல், மயில், நரி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் பொருட்டு, வனத் துறையினர் வனவிலங்கு வேட்டை தண்டனைக்குரிய குற்றம் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரத்தை பொதுமக்களிடையே விநியோகித்தனர். அதில், இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி, வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் விளக்கப்பட்டிருந்தது. மேலும், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வேட்டை மற்றும் விபத்தினால் காயம் அல்லது இறந்து கிடக்கும் விலங்குகள் தொடர்பாக, 94436-49119 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில், வனச்சரக அலுவலர் கோபிநாத் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வனவர் சம்பத்குமரன், பிரான்மலை வனவர் வினோத்குமார் உள்ளிட்ட வனத் துறையினர் ஈடுபட்டனர்.