Enable Javscript for better performance
'கோடை காலத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப விரைவில் குடிநீர் வசதி- Dinamani

சுடச்சுட

    

    'கோடை காலத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப விரைவில் குடிநீர் வசதி

    By DIN  |   Published on : 24th March 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கோடை காலத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ தலைமை வகித்தார். தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆஷாஅஜீத் முன்னிலை வகித்தார்.
    இதில், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை இன்னும் வழங்கப்படாதது குறித்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், சிவகங்கை மாவட்டம் வறட்சி மாவட்டமாக உள்ளது.
    இது குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு கேட்பதற்கு முன், சிவகங்கை மாவட்டம் முழுவதும் வேளாண் துறை, வருவாய்த் துறை, புள்ளியியல் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் வறட்சி குறித்த புள்ளி விவரங்களை முழுமையாகப் பதிவு செய்யவேண்டும். கோடை காலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானாவாரி பயிர் குறித்தும், சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.
    சிங்கம்புணரி பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பாலாறு, உப்பாறு இணையும் இடத்தில் தடுப்பு அணை கட்டவேண்டும். சூரணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பயிர் காப்பீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கடும் வறட்சியை கவனத்தில் கொண்டு, வேளாண் பணிகள் நடைபெறாத காலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் சிறு தொழில் மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்து, அதன்மூலம் வேலை வாய்ப்பை வழங்க முன் வரவேண்டும்.
    இவை தவிர, பெரும்பாலான பகுதிகளில் நடைபெறாமல் உள்ள நூறு நாள் வேலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
    தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
    இதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ அளித்த விளக்கம்: பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் வறட்சி குறித்த புள்ளி விவரங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை உள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
    சிங்கம்புணரி பகுதியில் உள்ள ஆறுகளில் உரிய ஆய்வு செய்து தடுப்பணை கட்ட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். சூரணம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப கோடை காலத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.
    விவசாயிகள் வேதனை: கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர், சிவகங்கை மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை. இதனால், விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிப்பதற்கு யாருமில்லாததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai