Enable Javscript for better performance
கம்ப காவியத்தில் தமிழின் தொன்மையை அறியலாம்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    தமிழர் மற்றும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து கம்ப காவியத்தில் உள்ளது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கம்பன் அறநிலை - கம்பன் கழகத்தின் சார்பில் 80-வது ஆண்டு கம்பன் திருநாள் விழாவின் 2-வது நாள் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமை வகித்தார்.
    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கம்பன் காவியம் எனும் தலைப்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:
    கம்ப ராமாயணம் ஆறு காண்டங்களை கொண்டது. இந்த ஆறு காண்டங்களிலும் 10 ஆயிரத்து 368 பாடல்கள் மற்றும் மிகைப் பாடல்களாக 1293 ஆக மொத்தம் 11 ஆயிரத்து 661 பாடல்கள் உள்ளன.  ராமாயணத்தை பார்த்தால் சூர்ப்பனகையின் சூழ்ச்சியால்தான் ராவணன் தோற்றான் என்பது புலனாகும். 
    கம்ப காவியத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களையும் தமிழ் மரபு மீறாமல் படைத்திருப்பதே கம்பனின் கவிநயம். கம்பனை முழுமையாக படித்தால்  தமிழ் தான் காலத்தால் முந்தியது என ஒப்புக் கொள்ளும் அளவிற்கு அந்த காவியத்தில் சான்றுகள் உள்ளன.
    தமிழில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் மிகுந்த வலிமையுள்ளது, ஆகவே தான் கம்ப காவியத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு தமிழ் பெயர்களை குறிப்பிட்டுள்ளான் கம்பன். இத்தகு பெருமை கொண்ட தமிழர் மற்றும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து கம்ப காவியத்தில் ஏராளமான சான்றாதாரங்கள் உள்ளன என்றார்.
    விழாவில், கம்பனில் கலைவண்ணம் எனும் தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வருகை தந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ முன்னதாக நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட் திருக்கோயிலுக்குச் சென்று அவரது சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai