Enable Javscript for better performance
சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை ஸ்ரீகாசி விசுவநாத சமேத விசாலாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
          சிவகங்கை தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில் விழா, கடந்த மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பின்னர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி காலை, மாலை வேளைகளில் மயில், ரிஷபம், அன்னம், யானை, ஆட்டுக் கிடாய், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
          மார்ச் 28 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதையடுத்து, முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விசேஷ அலங்காரத்துக்குப் பின்னர் வள்ளி, தெய்வானை, பிரியாவிடையுடன் சுப்பிரமணிய சுவாமி தேருக்கு  எழுந்தருளினார். கோயில் முன்புள்ள தேரடி நிலையிலிருந்து மாலை 5 மணியளவில் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. அரண்மனை வாசல், நேரு பஜார், தெற்கு ராஜரத வீதி, மதுரை முக்கு, திருப்பத்தூர் சாலை, சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக வலம் வந்த தேர், இரவு 9 மணிக்கு நிலைக்கு  வந்தது.  விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, வாணியங்குடி ஆகிய பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai