Enable Javscript for better performance
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இவ்விழா, கடந்த மார்ச் 25ஆம் தேதி அனுக்ஞை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. மார்ச் 26ஆம் தேதி அடிபரப்பு பரத்துதல், பிரசன்னாபிஷேக பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையொட்டி, தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை, ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் ஸ்பர்சா பூஜை, பரிவார பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 8.50 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் ஓத காலை 9.35 மணிக்கு மீனாட்சி மற்றும் சுந்தரேசுவரர் கோயில் மூலவர் விமானங்களுக்கு கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    வெள்ளிக்கிழமை மாலை மூலவராகிய மீனாட்சி மற்றும் சுந்தரேசுவரர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள்பொடி, பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பின் விசேஷ  தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.     
    கோயிலுக்கு ரெங்கராஜா பெருமாள் எழுந்தருளிய பின்னர், திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு ஆகம முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.
    இவ்விழாவில், தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai