Enable Javscript for better performance
ராமநாதபுரம், மானாமதுரை முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம், மானாமதுரை முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

    By DIN  |   Published on : 31st March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம், மானாமதுரை பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பால் குடங்கள், காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
           ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, கடந்த 21ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தினசரி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் மற்றும் சண்முகார்ச்சனையும் நடைபெற்றன.
        வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நொச்சிவயல் ஊருணிக் கடற்கரையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால் குடங்கள், காவடிகளை எடுத்துவந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பக்தர்களில் சிலர் 16 அடி, 20 அடி நீளமுள்ள அலகு வேல் பூட்டியும், மாலையில் பக்தர்கள் சிலர் பறவைக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
        கோயில் மூலவருக்கு வெள்ளிக்கிழமை நண்பகலில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவில் பக்தர்கள் பலர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சனிக்கிழமை, முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.
    பிரப்பன்வலசை முருகப்பெருமான் கோயில்: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்க்குடங்கள், காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள், இளைஞர்கள் சிலரும் 10 அடி,16 அடி, 20 அடி நீளமுள்ள அலகு வேல் பூட்டி வந்து முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து, மூலவராக வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கும், பாம்பன்  சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், விபூதி அலங்காரமும்  நடைபெற்றது. 
    குயவன்குடி ஸ்ரீ சுப்பையா கோயிலில்: ராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி சுப்பையா சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா,  கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு கோயில் முன்பாக  ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கியும், காவடி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
    மானாமதுரை: மானாமதுரை புறவழிச் சாலைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள் வைகையாற்றிலிருந்து பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்தனர். பின்னர், வள்ளி-தெய்வானை சமேத மூலவர் வழிவிடு முருகனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
          கோயில் முன்மண்டபத்துக்கு உற்சவர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக, கோயிலில் ஸ்கந்த ஹோமம் நடைபெற்று மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு, மயில் வாகனத்தில் உற்சவர் புறப்பாடாகி வீதி உலா வந்தார். 
    மானாமதுரை-தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சுப்ரமணியர் கோயிலிலும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, மூலவருக்கு அபிஷேகம் நடத்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர், சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
    மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்திலுள்ள ஸ்ரீ செல்வமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி,  வள்ளி-தெய்வானை சமேத மூலவர் செல்வமுருகனுக்கு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 
    மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள முருகன் கோயில்கள் மற்றும் திருப்புவனம், இளையான்குடி பகுதி முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai