"இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலேயே வாகனங்கள் செல்ல வேண்டும்'

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிவகங்கை மாவட்டத்திலிருந்து செல்வோர் காவல் துறை அறிவுறுத்திய

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிவகங்கை மாவட்டத்திலிருந்து செல்வோர் காவல் துறை அறிவுறுத்திய நிபந்தனைகளை கடைப்பிடித்து, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.    
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை (செப்.11) பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். 
இவை தவிர, இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனம், சைக்கிள் போன்றவற்றில் செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யவோ, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. அத்துடன் வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்தவோ, ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கட்டி செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் சொந்த வாகனத்தில் அதிக பட்சமாக 3 வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 
சிவகங்கை மாவட்டத்திலிருந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழித்தடங்கள்: சிவகங்கை, காளையார்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து வாகனங்களில் பரமக்குடி செல்பவர்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக செல்ல வேண்டும். இளையான்குடி வழியாக செல்லக் கூடாது. இளையான்குடியிலிருந்து வாகனங்களில் பரமக்குடி செல்பவர்கள் அதிகரை, முள்ளியரேந்தல், மஞ்சள்பட்டினம் வழியாக செல்ல வேண்டும். குமாரக்குறிச்சி வழியாக செல்லக் கூடாது. நாகநாதபுரத்திலிருந்து அஞ்சலி செலுத்த ஜீவா நகர், நேதாஜி நகர் வழியாக நடந்து செல்லக் கூடாது.
சாலைக் கிராமத்திலிருந்து வாகனங்களில் பரமக்குடி செல்பவர்கள் துகவூர் விலக்கு, கரும்புக் கூட்டம், கருஞ்சுத்தி, இளையான்குடி, அதிகரை, முள்ளியரேந்தல், மஞ்சள்பட்டினம் வழியாக செல்ல வேண்டும். இராதாபுளி விலக்கு, காவனூர், அண்டக்குடி விலக்கு, கோட்டையூர் விலக்கு, வாணி விலக்கு வழியாக செல்லக் கூடாது.
காரைக்குடியிலிருந்து வாகனங்களில் பரமக்குடி செல்பவர்கள் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக செல்ல வேண்டும். காளையார்கோயில், இளையான்குடி வழியாக செல்லக் கூடாது. தேவகோட்டை பகுதியில் இருந்து வாகனங்களில் பரமக்குடி செல்பவர்கள் சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக செல்ல வேண்டும். ஆனந்தூர் சந்திப்பு மற்றும் பொன்னலிகோட்டை சந்திப்பு வழியாக செல்லக் கூடாது. சிவகங்கை, மானாமதுரையிலிருந்து வாகனங்களில் பரமக்குடி செல்பவர்கள் பார்த்திபனூர் வழியாக செல்ல வேண்டும். அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், வழிவிடு முருகன் கோயில் வழியாகவும், பில்லத்தி, பிடாவூர், இளையான்குடி வழியாகவும் செல்லக் கூடாது. மானாமதுரையிலிருந்து திருவேங்கடம், தே.புதுக்கோட்டை வழியாக எந்த வாகனமும் செல்லக் கூடாது.
கொந்தகை முனியாண்டிபுரம், பசியாபுரம், கீழடி ஆகிய ஊர்களிலிருந்து பரமக்குடி செல்பவர்கள் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை வழியாக செல்ல வேண்டும். பாட்டம், பொட்டபாளையம் வழியாக செல்லக் கூடாது. பாட்டத்திலிருந்து செல்பவர்கள் பொட்டபாளையம், சிந்தாமணி விலக்கு,ரிங்ரோடு, சிலைமான், மணலூர், திருப்புவனம் வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். கொந்தகை, பசியாபுரம் வழியாக செல்லக் கூடாது.
பழையனூர் வழியாக பரமக்குடி செல்லும் வாகனங்கள் முக்குடி, நைனார்பேட்டை, திருப்புவனம் வழியாக  செல்ல வேண்டும். தாழிக்குளம், மாரநாடு, ஆவரங்காடு வழியாக செல்ல அனுமதி கிடையாது. அதே போல் மதுரையிலிருந்து பரமக்குடி செல்லும் வாகனங்கள் டி.வேலாங்குளம், திருப்பாச்சேத்தி பஜார் வழியாக கச்சநத்தம் செல்லவும், மழவராயனேந்தல் ஜங்சன் வழியாக கச்சநத்தம் செல்லவும், படமாத்தூர் வழியாக கச்சநத்தம் செல்லவும் அனுமதி கிடையாது. பரமக்குடியிலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள் உடையநாச்சியப்பன் ஜங்சன், திருப்பாச்சேத்தி  பஜார் வழியாக கச்சநத்தம் செல்லக் கூடாது. இதே போல் விருதுநகர் மாவட்டத்திலிருந்து பரமக்குடி செல்லும் வாகனங்கள் கட்டனூர், தஞ்சாக்கூர், கச்சநத்தம், ஆவரங்காடு வழியாக செல்லக் கூடாது.
 இமானுவேல்சேகரன் நினைவு தின பாதுகாப்புக்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 13 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 2500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com