மருத்துவர்களின் ஆலோசனைப்படி கர்ப்பிணிப் பெண்கள் செயல்பட வேண்டும்: அமைச்சர் க.பாஸ்கரன்

போதிய உடற்பயிற்சி, மனவளக்கலை ஆகிய பயிற்சிகளுடன் மருத்துவர்களின் ஆலோசனையின் படி கர்ப்பிணிப் பெண்கள்

போதிய உடற்பயிற்சி, மனவளக்கலை ஆகிய பயிற்சிகளுடன் மருத்துவர்களின் ஆலோசனையின் படி கர்ப்பிணிப் பெண்கள் செயல்பட வேண்டும் என தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.   
சிவகங்கை மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறையின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.
இதில்,  அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீதனப் பொருள்கள் வழங்கிப் பேசியது: 
 குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலந்து பேசி மகிழும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை தற்போது இல்லை. இன்றைய குடும்பச் சூழலில் அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் வழிகாட்டுதல் இன்றி கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி  வருகின்றனர்.  
ஆகவே, கர்ப்பிணிப் பெண்களுக்கு கரு உருவானது முதல் பிரசவ காலம் வரை மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலம் அதனை செயல்படுத்தி வருகிறது.  
அந்தவகையில், நடப்பு ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 1,720 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய வளைகாப்பு மூலம் பயிற்சி மற்றும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. போதிய உடற்பயிற்சி,மன வளக்கலை ஆகிய பயிற்சிகளுடன் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கர்ப்பிணிப் பெண்கள் செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 160 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு மூலம் சீதனப் பொருட்கள், 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டன.     இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)கீதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி, சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com