சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் கத்தியால் குத்திக் கொலை: இளைஞர் கைது
By DIN | Published On : 11th April 2019 07:35 AM | Last Updated : 11th April 2019 07:35 AM | அ+அ அ- |

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை தற்காலிக மருந்தாளுநர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை நேரு பஜாரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் தமிழ்ச்செல்வன் (37). இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருந்தகம் பிரிவில் தற்காலிக மருந்தாளுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் உள்ள மருந்தகத்தில் புதன்கிழமை நோயாளிகளுக்கு தமிழ்ச்செல்வன் மருந்து வழங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் (22) அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருண்குமார் கத்தியால் குத்தியதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அழகர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்ச்செல்வனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அதே வளாகத்தில் பக்கத்து அறையில் கத்தியுடன் அமர்ந்திருந்த அருண்குமாரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.