சுடச்சுட

  

  மானாமதுரை, பரமக்குடியில் சித்திரைத் திருவிழா தொடக்கம்: ஏப்.19-இல் அழகர் ஆற்றில் இறங்குகிறார்

  By DIN  |   Published on : 16th April 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 19 ஆம் தேதி ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.  
   சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக ஸ்ரீ தேவி, பூதேவி சமேதமாய் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாளுக்கு கையில் காப்பு அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இரவு பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் மண்டகப்படியில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். 
   வரும் 24 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய வைபவங்களாக 18 ஆம் தேதி இரவு அழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 19 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பு குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. 20 ஆம் தேதி மானாமதுரை  கிராமத்தார் மண்டகப்படியில் பெருமாள் பத்தி உலாத்துதல், 21 ஆம் தேதி கோர்ட்டார் மண்டகப்படியில் தசாவதாரம் நடைபெறுகிறது. வரும் 24 ஆம் தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
  பரமக்குடி: பரமக்குடி செளராஷ்ட்ர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 
  வரும் 17-ஆம் தேதி வரை (திங்கள், செவ்வாய், புதன்) காலை, மாலை யாகசாலை பூஜைகளும், இரவு பெருமாள் புறப்பாடும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 19-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் விசித்திர அலங்காரத்தில் நவரத்தின மாலைகள் ஜொலிக்க புஷ்பப் பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.  ஏப்ரல் 20-ம் தேதி வாணியர் உறவின் முறையார்களின் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் ராட்சத ராட்டினங்கள், மர்மக் கிணறு போன்ற கேளிக்கை அம்சங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai