எந்தவித அச்சமின்றி அனைவரும் வாக்களித்து ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்

சிவகங்கை மக்களவை மற்றும் மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல்களில்

சிவகங்கை மக்களவை மற்றும் மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல்களில் வாக்காளர்கள் அனைவரும் எந்தவித அச்சமுமின்றி வாக்களித்து ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மக்களவை தொகுதிக்குள்பட்ட திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15,50,390 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக திருமயம் தொகுதியில் 266 வாக்குச்சாவடிகள், ஆலங்குடியில் 248, காரைக்குடியில் 345, திருப்பத்தூரில் 334, சிவகங்கையில் 348 , மானாமதுரையில் (தனி) 321 என 1,862 வாக்குச்சாவடிகள் மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 321 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2,183 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன.  
இந்த வாக்குச்சாவடிகளில்  10,873 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவிற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சிவகங்கை மாவட்டத்தில் 122 வாக்குப் பதிவு மையங்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 43 வாக்குப் பதிவு மையங்கள் என மொத்தம் 165 மையங்கள் பதற்றமானவையாகக் கருதி, அந்த மையங்களுக்கு ஒரு நுண்பார்வையாளர் மற்றும் மத்திய துணை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் கூடுதலாக பணி மேற்கொள்ள உள்ளனர்.
இதுதவிர, ஒவ்வொரு மையத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. 
ஆகவே  வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ள தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் அனைவரும் எந்தவித அச்சமின்றி வாக்களித்து ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com