முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
ஆடித் திருவிழா: சிவகங்கை மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 03:50 AM | Last Updated : 04th August 2019 03:50 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சிவகங்கையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோயிலில் பக்தர்கள் பால் குடம், பறவைக் காவடி எடுத்து சனிக்கிழமை நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாற்றுவதற்காக கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சனிக்கிழமை மஞ்சள் அரைக்கும் வைபவத்தை நடத்தினர். இதே போல் மேலக்கோயில் ஆதித்திருத்தளி நாதர் ஆலயத்திலும், சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்திலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
அதேபோல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு உற்சவ ஆண்டாளுக்கு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு சார்த்தப்பட்டது. இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருவீதி உலா நடைபெற்றது.
வயிரவன்பட்டியில் வயிரவசாமி பிரமோற்சவ விழாவில் 9 ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 4.45 மணிக்குத் தேரோட்டம் நடைபெற்றது. 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரியும் 11 ஆம் திருநாளான திங்கள்கிழமை பஞ்சமூர்த்திகள் வயிரவசாமி மகா அபிஷேகமும், மாலை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் வைரவன், பொருளாளர் லெட்சுமணன் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் சக்திதிருநாவுக்கரசு, எஸ்.எல்.எஸ்.பழனியப்பன், ஏ.எல்.லெட்சுமணன், எஸ்.பி.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வணிகர் நல சங்கம் சார்பாக அன்னதான விழா நடைபெற்றது. இதையொட்டி சனிக்கிழமை காலை சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிறப்பு அன்ன வழிபாடு நடைபெற்றது . காலை 11 முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற அன்னதான விழாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, காளாப்பூர், வேங்கைபட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும், நொண்டி கருப்பர் கோயிலிலும் அன்னதான விழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன், மற்றும் நொண்டி கருப்பசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.