திருப்புவனத்தில் மட்டை ஊருணி தூர்வாரும் பணி தொடக்கம்: தினமணி செய்தி எதிரொலி

சிவகங்கை மா வட்டம் திருப்புவனத்தில் உள்ள மட்டை ஊருணி தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.


சிவகங்கை மா வட்டம் திருப்புவனத்தில் உள்ள மட்டை ஊருணி தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருப்புவனத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மட்டை ஊருணி உள்ளது. இந்த ஊருணி மூலம் திருப்புவனம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த ஊருணி முறையாக பராமரிக்கப்படாததால் மண் மேடுகளாலும், முட்புதர்களாலும் மறைந்து விட்டது.
இதையடுத்து, மண் மேடுகளால் மேவியிருந்த அந்த ஊருணியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாரச் சந்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஊருணிக்குள் போதிய இடம் இல்லாததால் கிராமப் புறங்களிலிருந்து வரும் விவசாயிகள் சந்தை அருகே உள்ள தொண்டி சாலையின் இருபுறமும் தற்காலிக கடை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள், புஷ்பவனேஷ்வரர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் என ஏராளமானோர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
ஆகவே, இதனை கவனத்தில் கொண்டு மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சந்தையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து, மட்டை ஊருணியை தூர்வார வேண்டும் என்கிற கோரிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, தினமணி நாளிதழில் சனிக்கிழமை (ஆக.2 ) செய்தி வெளியானது.
இதையடுத்து, திருப்புவனத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மட்டை ஊருணியை தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது. 
இதுகுறித்து அலுவலர்கள் கூறியது : தற்போது மட்டை ஊருணி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அப்பணி முழுமையடைந்தவுடன் முறையாக பராமரிக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், இதில் செயல்பட்ட வாரச் சந்தை திருப்புவனம்-அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அருகில் உள்ள வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் இனி வரும் வாரங்களில் நடைபெறும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com