Enable Javscript for better performance
அழிவின் விளிம்பில் மண்பாண்டத் தொழில்!- Dinamani

சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலைக் காப்பாற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  பழங்கால தமிழர்கள் சமையல் செய்யவும், தானியங்களை சேமித்து வைக்கவும் மண்பாண்டப் பொருள்களை தயார் செய்து பயன்படுத்தினர். அவ்வாறு பயன்படுத்தப்பட்டப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்துக்கும் உகந்தவையாக விளங்கின. நாளடைவில் நவீன கால மாற்றத்தின் காரணமாக நெகிழியை (பிளாஸ்டிக்) மூலப் பொருள்களாகக் கொண்டு உருவாக்கப்படும் குடம் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவைகளின் வரவால் மண்பாண்டப் பொருள்களுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாமல் போனது.
  தற்போது இத்தொழிலில் சிவகங்கை மாவட்டம் பூவந்தி மற்றும் மானாமதுரையில் ஏராளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மானாமதுரையில் தயாராகும் இசைக் கருவிகளில் ஒன்றான கடம், தமிழகம் மற்றும் இந்திய அளவில் உள்ள இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் இசைக் கலைஞர்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
  இதற்கு காரணம் சிவகங்கை, பூவந்தி, அரசனூர், மானாமதுரை, திருமாஞ்சோலை ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைக்கும் சுக்கான் இல்லாத  களிமண், சவடு மண், வண்டல் மண் ஆகியவற்றை முறையாக பக்குவப்படுத்தி மண்பாண்ட பொருள்களை உற்பத்தி செய்வதேயாகும்.
  அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இயற்கையான முறையில் தண்ணீரை குளிர வைக்கும் மண்பானையை பலாப்பழம் மற்றும் பூசணிக்காய் வடிவங்கள் உள்ளிட்ட விதவிதமான வடிவங்களில் தயார் செய்து வருகின்றனர். இதனால் மானாமதுரை மற்றும் பூவந்தி ஆகிய பகுதி மண்பாண்டப் பொருள்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
  இந்நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறை, மூலப் பொருள்களின் விலை உயர்வு, களிமண் அள்ளுவதற்கு அரசின் அனுமதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேறு தொழிலை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
  இதுகுறித்து பூவந்தியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி ஆறுமுகம் கூறியது: 
  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தி, மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில், அழகுடையான், சேந்தநதி, வயல்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
  இந்நிலையில் கண்மாய்களில் களிமண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்காததால் தற்போது ஏற்கெனவே அள்ளிய மண்ணை வைத்து தான் மண்பாண்டங்களை தயாரித்து வருகின்றோம். மேலும் மண்பாண்டப் பொருள்கள் அனைத்தும் அதற்கு உரிய (காவி) நிறமாக வருவதற்கு தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதியிலிருந்து மண்ணை மூட்டை 1-க்கு ரூ.50 முதல் ரூ.70 வரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 
  இதையடுத்து மண்ணைப் பக்குவப்படுத்தி, பொருள்களை உற்பத்தி செய்தல் முதல் சூளையில் வேக வைத்து எடுத்தல் வரை ஒரு வார காலம் ஆகிறது. மேற்கண்ட வேலைகளுக்கு வெளியிலிருந்து ஆள்களை வரவழைத்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் நாளொன்று ரூ. 400 முதல் கூலி தர வேண்டியுள்ளது. இதனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களை வைத்து உற்பத்தி பணியில் ஈடுபடுகிறோம்.
  இதுதவிர மண்பாண்டப் பொருள்களுக்கு முன்பு போல பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. மூலப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பூவந்தி மற்றும் மானாமதுரை ஆகிய பகுதியை தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இதன் மூலம் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும், போதிய அளவு வருமானம் இருப்பது மனநிறைவாக உள்ளது. இந்த தொழிலை எங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
  ஆனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இனிவரும் காலங்களில் இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் எங்கள் பிள்ளைகள் படித்து முடித்தவுடன் வேறு தொழிலுக்கு சென்று விடுகின்றனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai