மானாமதுரையில் 2 பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிவாள் வெட்டு: சாலை மறியல் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் இருவரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் இருவரை, மற்றொரு பிரிவினர் அரிவாளால் வெட்டியதையடுத்து, அச்சமுதாயத்தினர் வியாழக்கிழமை திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சதீஷ்குமார் (24) மற்றும் முத்து மகன் மற்றொரு சதீஷ்குமார்(23). இவர்கள் இருவரும் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். புதன்கிழமை இரவு, இவர்கள் இருவரும் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு கட்டடத்தின் கீழே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது, அவ்வழியாக 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், இவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
 காயமடைந்த இருவரும், உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும், புதன்கிழமை நள்ளிரவு பழைய பேருந்து நிலையம் முன்பாக காயமடைந்தவர்களின் சமூகத்தினர் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தின்போது, குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து கடும் தண்டனை வழங்க வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். அதன்பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வியாழக்கிழமை காலை மீண்டும் மானாமதுரை பழைய பேருந்து நிலையப் பகுதியில் காயமடைந்தவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் திரண்டு சாலைகளில் தடுப்புகளை போட்டு  மறியல் போராட்டம் நடத்தினர். சிலர், மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலை பகுதிக்குச் சென்று மறியல் செய்ய முயன்றனர். அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. மறியல் சம்பவங்களால் இப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டு, பதற்ற நிலை காணப்பட்டது. எனவே, அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
போராட்டம் நடத்தியவர்கள், மானாமதுரை காவல் துறை நிர்வாகம் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்து முழக்கமிட்டனர். 
மேலும், இளைஞர்கள் இருவரையும் வெட்டிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி. கார்த்திகேயன், வட்டாட்சியர் யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
5 பேரிடம் விசாரணை: இந்நிலையில், இது தொடர்பாக மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 5 பேரை, போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com