சிவகங்கை, புதுக்கோட்டையில் கிராமசபைக் கூட்டங்களை கண்காணிக்க காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக்

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களைக் கண்காணிக்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை பார்வையாளராக ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் அனுப்பியிருக்கிறது.
  இது குறித்து அச்சங்கத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஒய். பழனியப்பன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். 
தமிழகத்தில் உள்ளாட்சி செயலாளர்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்களின் (செயல் அலுவலர்கள்) கண்காணிப்பிலேயே ஊராட்சி நிர்வாகங்கள் நடைபெறுகின்றன. 
இந்நிலையில் பல ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களின் பயனாளிகளை மட்டும் அழைத்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிகிறது. 
சில ஊராட்சிகளில் கூட்டமே நடத்துவதில்லை என்றும் கையெழுத்து மட்டுமே வாங்கிக்கொண்டு கூட்டம் நடந்ததாக பதிவு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது. 
மேலும் கூட்டங்கள் நடைபெறுவது குறித்து அரசுத்துறையினர் முறையாக மக்களுக்கு அறிவிப்புச் செய்வதில்லை. எனவே சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களைக் கண்காணிக்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை பார்வையாளராக ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் அனுப்பியிருக்கிறது.
மேலும் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஊராட்சியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com