சுடச்சுட

  

  போலீஸாரின் ரோந்துப் பணிகளை கண்காணிக்கும் "இ-பீட்' செயலி அறிமுகம்

  By DIN  |   Published on : 14th August 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை நகரில் செல்லிடப்பேசி மூலம் போலீஸாரின் ரோந்துப் பணிகளை கண்காணிக்கும் "இ-பீட்' செயலி அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் தலைமை வகித்து "இ-பீட்' செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
  அதன் பின்னர்,அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது : காவல் துறையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகர் முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது, அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் காவலர் சோதனை வருகைக்கான புத்தகத்தில் கையெழுத்திடுவது வழக்கம். தற்போது தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் போலீஸாரின் ரோந்துப் பணிகள் முழுவதும் "இ-பீட்' செயலி மூலம் கண்காணிக்கப்படும். தமிழகத்தில் சென்னை, திருப்பூர், திருச்சி மற்றும் சேலம் ஆகிய 4 நகரங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது சிவகங்கையிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சிவகங்கை நகரில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு பாதுகாப்புக்காக செல்லும் போலீஸார்  அங்குள்ள "இ-பீட்' செயலிக்கான "க்யூஆர் கோடை' தங்கள் செல்போன் மூலம் "ஸ்கேன்' செய்தால், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு விடுவர். இதன் மூலம் அவர் மேற்கொள்ளும் கண்காணிப்புப் பணிகளை கட்டுபாட்டு அறையிலிருந்தே கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னையின் போது அருகில் உள்ள போலீஸாரை சம்பவ இடத்துக்கு விரைவாக வரவழைக்க முடியும். அத்துடன் ரோந்து செல்லும் போலீஸார் தங்களுடைய அவசரத் தேவைக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் அனுப்பவும் முடியும். இந்த சேவை சிவகங்கை நகரில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றார்.
  இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகர் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai