சிவகங்கையில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்!

சிவகங்கை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து

சிவகங்கை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சேகரிக்கவும், மீண்டும் பயன்படுத்தவும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரை, மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பாதாள கழிவு நீரோடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம்  திட்டம் அறிவிக்கப்பட்டது. 
இத்திட்டத்துக்கு ரூ.31 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் தொடங்கின.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பட்டி-களத்தூர் சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.9 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 
இதில், நவீன தொழில்நுட்ப அடிப்படையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல் நிலை கழிவுநீர்  சேகரிக்கும் தொட்டி, 2 ஆம் நிலை தொட்டி, குளோரின் கலக்கும் தொட்டி ஆகிய பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரங்கள் செயல்படுவதற்கான மின் இணைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. 
இந்நிலையில், கழிவு நீர்  சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு நீரை  சேகரிக்கவும், பயன்படுத்தவும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்து  வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது : 
சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றி அதனை பயன்படுத்துவதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட பணிகளுக்கு பின்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் கடும் வறட்சியின் காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கால்நடைகளுக்கு தீவனங்களும் கிடைப்பதில்லை. 
ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட  நீரை  சேகரிக்கவும், பயன்படுத்தவும் போதிய நிலத்தை வழங்க வேண்டும். 
அந்த சேகரிக்கப்படும் நீரை வேளாண் பணிகளுக்கும், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் புல்லை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கவும் வேண்டும் என்றனர்.  
இதுகுறித்து குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறியது : சுத்திகரிப்பு நிலையத்தைப் பொருத்தவரை இயந்திரங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிலையத்துக்கு தேவையான அதிக மின் கடத்தும் திறன் கொண்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) வந்தவுடன் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்தலாம் என்றார்.
இதுகுறித்து சிவகங்கை நகராட்சி ஆணையர் அயூப்கான் கூறியது : 
சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை  சேகரிக்கவும், பயன்படுத்தவும் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிலம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளது. போதிய நிலம் வழங்கப்பட்ட பின்னர் அதில் முதல் கட்ட சோதனை முயற்சியாக கால்நடைகளுக்கு தீவனப்புல் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com