திருப்பத்தூர், திருவாடானை, பரமக்குடியில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை பகுதிகளில்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோயிலில்  கண்ணபிரானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து பிள்ளையார்பட்டி கோவிந்தானந்தா சுவாமிகள் தலைமையில் உறியடி வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டு பானை உடைத்தனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர், சிறுமியரின் பரதநாட்டியம் மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு கிருஷ்ணனணுக்கு அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டது.  பின்னர் இரவு  8 மணிக்கு சுவாமி முக்கிய வீதிகள் வழியாக மின்னொளி ரதத்தில் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது.  
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள பூக்குளம், எம்.சாலை, இளஞ்செம்பூர் ,காத்தாகுளம்,  சிறுபோது உள்ளிட்ட   10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு  கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 5 டிராக்டர்கள் மூலமாக இலவசமாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. 
ராமநாதபுரம் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்  செந்தில் செல்வானந்த் தலைமையில் முதுகுளத்தூர் 
ஒன்றிய செயலாளர் ஜெயபால் , மாவட்ட நிர்வாகி பூக்குளம் சேகர், மாவட்ட துணை செயலாளர் மாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோமதி சிவாஜி, சகுபர் அலி ஆகியோர்  இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 
பரமக்குடி: பரமக்குடி சுபிக்ஷா மழலையர் பள்ளியில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. 
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கவிதா ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் நாகேஸ்வரி வரவேற்றார். 
மாணவர்கள் கிருஷ்ணன் வேடமிட்டும், மாணவிகள் ராதை வேடமிட்டும் வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணரின் படங்களுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். 
விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிராமத்தில் உள்ள ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் திருவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
முக்கிய நிகழ்ச்சியான வியாழக்கிழமை திருக்கல்யாணம், அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு உறியடி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com