"தொடக்கக் கல்வித் துறையை பாதிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்'

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை பாதிக்கக்கூடிய வகையில் சமீபத்தில் வெளிட்டுள்ள அரசாணையை

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை பாதிக்கக்கூடிய வகையில் சமீபத்தில் வெளிட்டுள்ள அரசாணையை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 35 ஆயிரத்து 414 ஆரம்பப் பள்ளிகளும், 9 ஆயிரத்து 208 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 
கடந்த 25 ஆண்டுகளாக தனி நிர்வாக அமைப்பாகச் செயல்பட்டு வந்த தொடக்கக்கல்வித் துறையை மீண்டும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அரசாணை (நிலை) எண் : 145 இல் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அதே வளாகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளது. 
இதேபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாநில இயக்ககம் வெளியிட்டுள்ள செயல்முறைகளின் படி குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலைப்பள்ளிகள் இருக்கும் என்றும் அக்குறுவள மையங்களில் இடம் பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைக் கண்காணிக்கும் அதிகாரம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்க வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்னொரு பள்ளியை கண்காணிப்பார் என்பதும், ஆய்வு செய்வார் என்பதும் பொருத்தமானதல்ல. 
இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கை 2019 இன் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வளாகக்கல்வி, பள்ளிகள் இணைப்பு போன்ற ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாதிக்கக்கூடிய அம்சங்களை தமிழக அரசு இப்போதே நடைமுறைப்படுத்துவது போல் தெரிகிறது.
ஏற்கெனவே, மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 46 அரசு ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கக்கல்வித் துறை தொடர்பாக வெளியிடப்படும் இதுபோன்ற அரசாணைகள் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாது என்பதால் மேற்படி அரசாணைகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தவறும்பட்சத்தில் தொடக்கக் கல்வித்துறையை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலம் முழுவதும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com