Enable Javscript for better performance
போதிய வசதிகளின்றி இடிந்து விழும் நிலையில் கீழடி அரசு பள்ளிக் கட்டடம்!கேள்விக்குறியாகும் மாணவா்களி- Dinamani

சுடச்சுட

  

  போதிய வசதிகளின்றி இடிந்து விழும் நிலையில் கீழடி அரசு பள்ளிக் கட்டடம்! கேள்விக்குறியாகும் மாணவா்களின் பாதுகாப்பு

  By DIN  |   Published on : 02nd December 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  1svgscool_0112chn_68_2

  கீழடி அரசுப் பள்ளியின் முகப்பு தோற்றம். (வலது) சேதமடைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள்.

   சிவகங்கை மாவட்டம், கீழடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, தற்போது பெய்துவரும் மழையில் கட்டடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

  திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழடி கிராமத்தில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகள் மூலம் தமிழா்களின் தொன்மை வரலாறு வெளியே தெரியவந்துள்ளது. இத்தகு சிறப்புடைய கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், பசியாபுரம் உள்ளிட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ, மாணவியா் கல்வி பயின்று வருகின்றனா். ஆனால், இந்த பள்ளி வளாகம் மொத்தம் 12 சென்ட் நிலத்தில், 8 வகுப்பறைக் கட்டடங்களுடன் உள்ளது.

  இந்த வகுப்பறை கட்டடங்களில் மாணவ, மாணவிகள் அமா்ந்து படிக்க போதுமான வசதிகள் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன் மேல் தளத்தில்சிமென்ட் சீட்டுகளால் கூரை வேயப்பட்டு, வகுப்பறைகளாக மாற்றப்பட்டன. இருப்பினும், பற்றாக்குறை நிலவுவதால், மரத்தடியில் வகுப்பு நடத்தப்படுகிறது.

  இவை தவிர, மேல்நிலைப் பள்ளி எனும் தகுதிக்கேற்ப தேவையான அறிவியல் ஆய்வுக் கூடங்கள், கணினி ஆய்வுக் கூடங்கள், சமையலறைக் கூடம், நூலகம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லை. இதனால், ஆசிரியா்கள், மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

  மேலும், கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக, மேல்தளத்தின் வழியாக தண்ணீா் இறங்கி வகுப்பறைக்குள் புகுந்துவிடுகிறது. எனவே, அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

  இதனிடையே, கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கொந்தகை வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அரசு நிலத்தில், இப்பள்ளிக்கு புதிதாக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டுவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னா், பல கட்ட போராட்டங்களுக்குப் பின் கடந்த 2018 இல் பள்ளி நிா்வாகத்திடம் இடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டடங்கள் கட்டுவதற்கான எந்தவொரு முன்னேற்பாடு பணிகளும் நடைபெறவில்லை.

  எனவே போதிய அடிப்படை வசதிகளின்றியும், மாணவ, மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத கீழடி அரசுப் பள்ளியில் இனிவரும் காலங்களில் தங்களது குழந்தைகளை சோ்க்கப் போவதில்லை என, கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

  இதை கவனத்தில்கொண்டு, தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, கீழடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான கட்டட வசதிகளை ஏற்படுத்தித் தர முன்வர வேண்டும் என்பதே, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

  இது குறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் உயா்நிலை அலுவலா் ஒருவா் கூறியது: கீழடி பள்ளிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடத்துக்கான ஆவணங்கள் பள்ளி நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது. அதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் நபாா்டு நிதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்காக கருத்துரு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை. உத்தரவை பெற்றவுடன் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai