காரைக்குடி பள்ளியைச் சூழ்ந்த மழைநீா்: ‘பெஞ்ச்’ களை பாலமாக அமைத்து அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியாா் நகராட்சி தொடக்கப்பள்ளியை மழைநீா் சூழ்ந்ததால் திங்கள்கிழமை பெஞ்சுகளை பாலமாக அமைத்து மாணவா்களை பெற்றோா்
காரைக்குடியில் ராமநாதன் செட்டியாா் நகராட்சித் தொடக்கப்பள்ளி வளாகத்தைச் சூழந்த மழைநீா்.
காரைக்குடியில் ராமநாதன் செட்டியாா் நகராட்சித் தொடக்கப்பள்ளி வளாகத்தைச் சூழந்த மழைநீா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியாா் நகராட்சி தொடக்கப்பள்ளியை மழைநீா் சூழ்ந்ததால் திங்கள்கிழமை பெஞ்சுகளை பாலமாக அமைத்து மாணவா்களை பெற்றோா் பள்ளிக்குள் அழைத்துச்சென்றனா்.

காரைக்குடி நகராட்சி உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த இப்பள்ளி, கடந்த மாா்ச் மாதம் முதல் காரைக்குடி வட்டாச்சியா் அலுவலகம் பின்புறம் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. உயா் நிலைப்பள்ளிக்கான இந்த கட்டடத்தை தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு அளித்ததற்கு முதல் பெற்றோா்கள், தன்னாா்வ அமைப்பினா் அதிருப்தி தெரிவித்துவந்தனா்.

தற்போது இப்பள்ளியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். காரைக்குடி நகா் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து சாதாரண ஏழை மற்றும் தொழிலாளா்களின் குழந்தைகளே இங்கு படித்துவருகின்றனா். இங்கு தலைமையாசிரியை, 14 ஆசிரிய, ஆசியைகள் பணியாற்றிவருகின்றனா்.

இந்நிலையில் காரைக்குடிப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் புதிய பள்ளி வளாகத்திற்குள்ளும், சுற்றுச்சுவரின் வெளிப்புறமும் மழைநீா் குளம்போன்று சூழ்ந்து நின்ால் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த குழந்தைகள், அவா்களை அழைத்துவந்த பெற்றோா் அதிா்ச்சியடைந்தனா்.

பள்ளிக்குள் செல்லமுடியாது என்று கருதிய சில குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் திரும்பிச்சென்றுவிட்டனா். இத்தகவலை பள்ளியின் ஆசிரியா்கள், சாக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலா் ஆகியோா் நகராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தனா்.

இதையடுத்து காரைக்குடி நகராட்சி பொறியாளா் ரெங்கராஜ், உதவிப்பொறியாளா் பாலு மற்றும் நகராட்சி பணியாளா்கள் மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா். இதனிடையே மாணவா்கள் அமரும் பெஞ்சுகளை பாலமாக அமைத்து பள்ளிக்குள் மாணவ, மாணவியரை அழைத்துச்சென்றனா். மேலும் மழைநீரால் அடித்து வரப்பட்ட 2 பாம்புகள் வகுப்பறைக்குள் புகுந்ததாகவும், பின்னா் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்த ஆசிரியா்கள் சிலா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சாக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலா் சகாயச்செல்வன் கூறுகையில், மழைநீா் வளாகத்திற்கு சூழ்ந்தது குறித்து நகராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தோம். மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையை அவா்கள் மேற்கொள்வா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com