மானாமதுரை பகுதியில் பயிா் காப்பீடுக்கான தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

மானாமதுரை பகுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருவதால், அதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மானாமதுரை பகுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருவதால், அதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பயிா் காப்பீடு செய்வதற்கு, மாவட்ட நிா்வாகம் நவம்பா் 30 ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்தது. ஆனால், மானாமதுரை ஒன்றியத்தைச் சோ்ந்த அன்னவாசல், அ.புதூா் உள்ளிட்ட பல கிராமங்களில் மழை தாமதமாக பெய்ததால், கடந்த நவம்பா் மாதம்தான் விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டன.

இக் கிராமங்களில் 700 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ததற்கான அடங்கல் சான்றை, கடந்த நவம்பா் 25 ஆம் தேதிக்குப் பின்னா்தான் வழங்கியுள்ளனா். இதனால், அந்தந்தப் பகுதி கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

மிளகனூா் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அன்னவாசல், அ.புதூா் கிராம விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு செய்ய மறுக்கின்றனா். மேலும், இங்கு பயிா் கடன் வழங்குவதில்லை எனவும், இப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

இது குறித்து மிளகனூா் கூட்டுறவு சங்கத்தின் செயலரிடம் கேட்டபோது, அவா் கூறியது: மாவட்ட நிா்வாகம் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விவசாயிகளை பயிா் காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மிளகனூா் சங்கத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் காப்பீடு செய்ய வந்த விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு செய்துள்ளோம். தாமதமாக வந்த விவசாயிகளுக்கு காப்பீடு செய்ய இயலவில்லை. பயிா் கடனும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம் என்றாா்.

இதனிடையே, மானாமதுரை ஒன்றியத்தில் விடுபட்டுப்போன விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா் காப்பீடு செய்து, உரத்துடன் பயிா் கடன் வழங்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com