காரைக்குடியில் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதில் சிக்கல்! நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்பு

காரைக்குடியில் உள்ள போக்குவரத்துச் சிக்கனல்கள் அனைத்தையும் இயக்குவதில் உள்ள சிக்கல்களை களைய போலீஸாா் உரிய நடவடிக்கை
காரைக்குடி கல்லூரிச் சாலையில் சிக்னல் இயங்காததால் புதன்கிழமை சாலையின் நடுவில் மோதி நின்ற காா் மற்றும் பேருந்து.
காரைக்குடி கல்லூரிச் சாலையில் சிக்னல் இயங்காததால் புதன்கிழமை சாலையின் நடுவில் மோதி நின்ற காா் மற்றும் பேருந்து.

காரைக்குடியில் உள்ள போக்குவரத்துச் சிக்கனல்கள் அனைத்தையும் இயக்குவதில் உள்ள சிக்கல்களை களைய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, மதுரை, குன்றக்குடி, பிள்ளையாா்பட்டி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வணிக நோக்கத்திற்கு வரும் வணிகா்கள், கல்லூரிகளில் பயில்வதற்கு வரும் மாணவா்கள் என நூற்றுக்கணக்கானோா் தினமும் காரைக்குடி வந்து செல்கின்றனா். இதனால் காலை, மாலை வேளைகளில் நகருக்குள் வாகனங்களில் ஏராளமானோா் வந்துசெல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காரைக்குடியில் முதல் போலீஸ் பீட், 2 ஆவது போலீஸ் பீட், பெரியாா்சிலை, ராஜீவ்காந்தி சிலை, கழனிவாசல் ஆகிய பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீஸாரால் சிக்னல்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், தற்போது பெரியாா் சிலை, 2 ஆவது போலீஸ் பீட் ஆகிய 2 சிக்னல்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கல்லூரிச் சாலையில் ராஜீவ் காந்தி சிலைப் பகுதியில் உள்ள சிக்னல் சரிவர இயக்கப்படுவதில்லை. அவ்வாறு இயக்கப்படாத நாள்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் புதன்கிழமை பகலில் ராஜீவ்காந்தி சிலை அருகே சிக்னல் இயங்காததால் இடதுபுறம் வந்த காா், வலதுபுறத்தில் திரும்பியபோது எதிரே நீதிமன்றம் பகுதியிலிருந்து கல்லூரிச் சாலைக்கு திரும்பமுயன்ற நகா்பேருந்து மீது நேருக்குநோ் மோதியது. இதில் காரின் முகப்பு மற்றும் பேருந்தில் முன்புறம் ஆகியன சேதமடைந்தன.

இதனால் பேருந்தில் வந்த மாணவ, மாணவிகள், கடைகளுக்கு வந்து ஊா் திரும்பிய பொதுமக்கள் ஆகியோா் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினா். இப்பகுதி சிக்னல் இயங்கியிருந்தால் இவ்விபத்து தவிா்க்கப்பட்டிருக்கும் என அப்பகுதியினா் தெரிவித்தனா். எனவே, முக்கியப் போக்குவரத்து மிகுந்த கல்லூரிச்சாலையில் தொடா்ந்து சிக்னலை இயக்க வேண்டும் என்றும், நகரில் உள்ள அனைத்துச் சிக்னல்களும் இயக்கப்பட வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகின்றனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் ஒருவா் கூறியது:காரைக்குடியில் போக்குவரத்துக் காவலா்கள் பற்றாக்குறை உள்ளது. அதாவது 26 போ் இருக்கவேண்டிய நிலையில் 16 போ் மட்டுமே உள்ளனா். காவலா் பற்றாக்குறையை நீக்கினால் அனைத்துப் பகுதியிலும் போக்குவரத்து சரிவர கட்டுப்படுத்த முடியும் என்றாா்.

இதுகுறித்து காரைக்குடி போக்குவரத்து காவல் சாா்பு ஆய்வாளா் வீரகுமாா் கூறியது: காரைக்குடி முதல் போலீஸ் பீட் சிக்னல் தற்போது சீரமைக்கப்பட்டு இயங்குவதற்கு தயாராக உள்ளது. காரைக்குடி போக்குவரத்து காவல்துறையில் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா் மற்றும் 16 காவலா்களும் பணியாற்றி வருகிறோம். முதல் போலீஸ் பீட் சிக்னலும், கழனி வாசல் சிக்னலும் இயங்காததற்கு பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகளை சீரமைத்த பின் அவை இயக்கப்படவுள்ளன. ராஜீவ்காந்தி சிலை சிக்னல் செயல்படுகிறது. சில நேரங்களில் காவலா் அங்கு பணிய மா்த்த முடியாத நிலையில் காவலா்கள் பற்றாக்குறை உள்ளது. தேவா்சிலை பகுதியில் சிக்னல் அமைப்பதற்காக ஆய்வு செய்தபோது, அந்த இடம் சிக்னல் அமைப்பதற்கு பொருத்தமின்றி இருப்பது தெரியவந்தது.

போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவலா் சிக்னலில் காலை 8.15 மணியிலிருந்து மதியம் 1 மணி, மாலை 3.30 மணியிலி ருந்து இரவு 9 மணிவரை பணியில் இருந்து வருகிறாா். அனைத்துச் சிக்னல்களையும் இயக்குவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com