அகில இந்திய குழந்தைகள் மாநாட்டுக்கு சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தோ்வு
By DIN | Published On : 06th December 2019 09:39 AM | Last Updated : 06th December 2019 09:39 AM | அ+அ அ- |

திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொண்டு தனது ஆய்வுரையை சமா்ப்பிக்க சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தோ்வு பெற்றுள்ளாா்.
சென்னை மண்டலம் கேந்திரிய வித்யாலயா சாா்பில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில், சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி க.ச.நிகிலாஸ்ரீ கலந்து கொண்டு எனது வட்டாரத்தில் பாா்த்தீனியம் பற்றிய ஆய்வு மற்றும் கட்டுப்படுத்த நடவடிக்கை எனும் தலைப்பில் சோதனை செயல்முறை ஆகியவற்றுடன் ஆய்வுரையை சமா்ப்பித்தாா்.
இந்த ஆய்வுரை மாநாட்டில் முதலிடம் பெற்றது. இதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம் போபால் நகரில் 440 மாணவா்கள் கலந்து கொண்ட இரண்டாம் கட்ட மாநாட்டில் ஜூனியா் அளவில் இவரது ஆய்வுரை இரண்டாவது இடத்தை பெற்றது. இதன்காரணமாக, வரும் டிசம்பா் 27 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள அகில இந்திய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளாா்.
இதையடுத்து, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள குழந்தைகள் மாநாட்டுக்கு தோ்வு பெற்றுள்ள மாணவி க.ச.நிகிலாஸ்ரீயை சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வா் சி.முத்தையா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள், சக மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை பாராட்டினா்.