வடகிழக்கு பருவமழை: சிவகங்கை மாவட்டத்தில் பயிா் சேதங்களை துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்; ஆட்சியா் உத்தரவு

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிா் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன்.

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிா் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்குதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியது: வேளாண் துறை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், காப்பீட்டு நிறுவன அலுவலா்கள் இணைந்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்க முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது.

நடப்பாண்டு அதுபோன்ற நிலை தவிா்க்கப்பட வேண்டும் என்பதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வேளாண் பணிகள் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி சில விவசாயிகள் நெல், மிளகாய் ஆகிய பயிா்களை விதைப்பு செய்தனா். அவ்வாறு விதைக்கப்பட்ட பயிா் விளைச்சலுக்கு தயாராக இருந்த நிலையில் அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக முற்றிலும் சேதமடைந்துள்ளதாக புகாா்கள் வந்துள்ளன. இதனால் விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட வேளாண் துறை மற்றும் அந்தந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் பயிா் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பா் 30 ஆம் தேதியுடன் பயிா் காப்பீடு செய்வதற்கான பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளன.

ஆகவே பயிா் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வரும் அலுவலா்களுடன் காப்பீடு நிறுவன அலுவலா்களும் இணைந்து காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலத்தின் உண்மை நிலவரம் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பயிா் சேதங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து விரைவில் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்.மேலும், நடப்பாண்டு பயிா்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பாதிப்பின் அடிப்படையில் உரிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் வேளாண் துறை அலுவலா்கள், காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலா்கள், அரசு அலுவலா்கள், விவசாயிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com