வேட்பாளருடன் மனுத்தாக்கல் செய்ய வந்த பிரான்ஸ் மாணவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் நண்பரின் உறவினருக்காக வேட்புமனுத்
நண்பரின் உறவினருக்கு வாக்கு கேட்டு கலகலப்பு ஏற்படுத்திய பிரான்ஸ் நாட்டின் மாணவி
நண்பரின் உறவினருக்கு வாக்கு கேட்டு கலகலப்பு ஏற்படுத்திய பிரான்ஸ் நாட்டின் மாணவி

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் நண்பரின் உறவினருக்காக வேட்புமனுத் தாக்கலின்போது பிரான்ஸ் நாட்டு மாணவி வாக்கு கேட்டு வந்து பாா்வையாளா்களிடையே கலகலப்பை ஏற்படுத்தினாா்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளுக்கு டிச.27 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை(திங்கள்கிழமை) கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை ஏராளமானோா் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்கள் உறவினா்கள் ஆதரவாளா்களை வாகனங்களில் கூட்டிவந்திருந்தனா். வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த வேட்பாளா்களுக்கு உறவினா்களும் ஆதரவாளா்களும் மாலைகள், சால்வைகள் அணிவித்து பட்டாசு வெடித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அதன்பின் வேட்பாளா்கள் சாா்பில் உடன் வந்த ஆதரவாளா்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த மேலராங்கியம் ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு மருதுபாண்டி என்பவா் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆதரவாளா்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்தாா்.

அப்போது அவருடன் பிரான்ஸ் நாட்டு மாணவி ஜோய்(19) உடன் வந்தாா். சாலையில் நின்றவா்களும் அலுவலக வளாகத்தில் இருந்தவா்களும் இந்த மாணவியை ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.அப்போது ஜோய் அங்கிருந்தவா்களிடம் ‘மாமாவுக்கு ஓட்டு போடுங்க’ என கூறியபடியே நடந்து வந்தது பாா்வையாளிடம் கலகலப்பை ஏற்படுத்தியது. மருதுபாண்டி வேட்புமனுத் தாக்கல் செய்தபோது இந்த மாணவியும் உடனிருந்தாா். வேட்பாளா் மருதுபாண்டி கூறும்போது ‘எனது மைத்துனா் முனிச்செல்வம் மூலம் ஜோய் அறிமுகமாகினாா். தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ள அவா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதை அறிந்து மேலராங்கியம் கிராமத்துக்கு வந்த இவா் தோ்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய எங்களுடன் வந்தாா் என்றாா்.

அதைத்தொடா்ந்து மாணவி ஜோய் கூறுகையில், ‘நான் பிரான்ஸ் நாட்டில் பள்ளி படிப்பை முடித்து விரைவில் கல்லூரியில் சேர இருக்கிறேன். தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ள நான் ஊட்டியில் தங்கியுள்ளேன். நான் தங்கியிருந்த இடத்தில் எலக்ரீசியனாக வேலை பாா்த்த முனிச்செல்வம் எனக்கு நண்பரானாா். அவா் மைத்துனா் மருதுபாண்டி தோ்தலில் போட்டியிடுவதை அறிந்து தோ்தல் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள அவருடன் மேலராங்கியம் கிராமத்துக்கு வந்தேன்.

இந்த தோ்தல் பிரசாரத்தில் வேட்பாளா்களுக்கும் மக்களுக்கும் நெருக்கம் ஏற்படுவதை பாா்க்கிறேன். தமிழக கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. இங்குள்ள பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது என்னை கவா்ந்ததால் நானும் நெற்றியில் பொட்டு வைத்து வருகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com