சுடச்சுட

  

  புவி வெப்பமயமாவதை தடுக்க மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்: காமராஜர் பல்கலை. துணைவேந்தர்

  By DIN  |   Published on : 13th February 2019 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
  சிவகங்கை அருகே அரசனூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக் கழக கிளையில், புவி வெப்பமயமாவதைத் தடுப்பது குறித்த அறிவியல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பி. முருகேசன் தலைமை வகித்தார். 
  இம்மாநாட்டை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் தொடக்கிவைத்துப் பேசியதாவது: நமது வாழ்வியல் முறை இயற்கையோடு இணைந்த ஒன்றாகும். ஆனால், இன்றைய நிலையில் சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து வருகிறது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, இயற்கை முறையிலான பொருள்களை பயன்படுத்த வேண்டும். 
  தற்போது, அதிகளவில் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பயோ-எத்தனாலை பயன்படுத்த முன் வரவேண்டும். இவை தவிர, நவீன கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். 
  இதில், அழகப்பா பல்கலைக் கழக உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எஸ். கருத்தபாண்டியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் பி. சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
  நிகழ்ச்சியில், மாநாட்டு மலரை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் எம். கிருஷ்ணன் வெளியிட, அழகப்பா பல்கலைக் கழக உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எஸ். கருத்தபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
  இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பிரிஸ்ட் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் கோயில்தாசன் மனோகரன் வரவேற்றார். இப்பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான சட்டக் கல்லூரி இயக்குநர் பி.எஸ். சீனிவாசன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai