ஏலம் முடிந்தும் மானாமதுரை வாரச்சந்தையை ஒப்படைப்பதில் தாமதம்: மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருப்பு
By DIN | Published On : 20th February 2019 06:20 AM | Last Updated : 20th February 2019 06:20 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாரச்சந்தைக்கு ஏலம் நடந்து முடிந்து 20 நாள்களாகியும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கிடைக்காததால் ஏலதாரருக்கு சந்தையை ஒப்படைக்க முடியாத நிலையில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் நேரடியாக சந்தைக் கட்டணம் வசூலிக்கும் நிலை தொடர்கிறது.
மானாமதுரையில் வாரச்சந்தைக்கு கடந்தாண்டு கடும்போட்டி காரணமாக ரூ. 86 லட்சம் வரை ஏலம் போனது. குத்தகை காலம் முடிந்ததும் பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக சந்தையில் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மானாமதுரை பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் சந்தை வசூல் பணியில் ஈடுபடுவதால் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 55.60 லட்சத்துக்கு சந்தை ஏலம் உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் ஏலம் நடந்து முடிந்து 20 நாள்களாகியும் இதுவரை சந்தையை ஏலம் எடுத்தவரிடம் சந்தை ஒப்படைக்கப்படாத நிலை உள்ளது. பேரூராட்சி பணியாளர்களே தொடர்ந்து சந்தையில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி வட்டாரங்கள் தெரிவித்தது: கடந்த முறை சந்தை ரூ. 86 லட்சம் வரை ஏலம்போனது. இப்போது சந்தை ரூ 55.60 லட்சத்துக்கு கடந்தாண்டைக் காட்டிலும் 30 லட்சம் வரை குறைவாக ஏலம்போனது. குறைந்த தொகைக்கு ஏலம் முடிந்ததால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுத்தான் குத்தகைதாரரிடம் சந்தையை ஒப்படைக்க முடியும். மாவட்ட ஆட்சியரிடம் சந்தை ஏலம் முடிந்ததற்கான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தை ஏலம் தொடர்பாக ஆட்சியரிடம் பேரூராட்சி உதவி இயக்குநர் மூலம் விளக்கமும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை ஆட்சியரிடமிருந்து சந்தையை ஒப்படைக்க அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் குத்தகைதாரரிடம் சந்தை ஒப்படைக்கப்படும். அனுமதி கிடைக்காத நிலை தொடர்ந்தால் பேரூராட்சி நிர்வாகம் மூலம் நேரடியாக சந்தையில் கட்டணம் வசூலிக்கும் நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.