"கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு குழு காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு பரிசீலனை'
By DIN | Published On : 04th January 2019 01:35 AM | Last Updated : 04th January 2019 01:35 AM | அ+அ அ- |

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு குழு காப்பீட்டு (குரூப் இன்சூரன்ஸ்) தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் எஸ்.செல்வன் தெரிவித்தார்.
மானாமதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018 டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் அஞ்சல்துறை சேவைகள் பாதிக்கப்பட்டன.
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு, சங்கத்தின் மத்தியக்குழு நிர்வாகிகளிடம் உறுதியளித்ததையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந் நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளதாக மத்திய சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கல்விச் செலவு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
"குரூப் இன்சூரன்ஸ்' தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும். ஓய்வுபெறும்போது விடுமுறை தினங்களை திரும்ப ஒப்படைத்து 180 நாள்கள் விடுமுறையை பணமாகப் பெறலாம். கிராமிய அஞ்சல் ஊழியர்களாக பணிபுரியும் ஆண்களுக்கு மூன்று முறையும் பெண் ஊழியர்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணி இடமாறுதல் வழங்கப்படும். காப்பீடு நிறுவனங்கள் மூலம் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சலுகை வழங்க பரிசீலிக்கப்படும். அவசரகால விடுப்பு 5 நாள்களாக வழங்கப்படும். மேலும் ஊழியர்களின் பல கோரிக்கைகளை பரிசீலித்து அமல்படுத்தவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்றார்.