பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
By DIN | Published On : 04th January 2019 01:36 AM | Last Updated : 04th January 2019 01:36 AM | அ+அ அ- |

பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தசைச் சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதற்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் மேற்கொள்பவர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
இவை தவிர, மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களான 60 வயதிற்குள்ப்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதுக்குள்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும். ஏற்கெனவே இத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்படும்.
மேற்கண்ட தகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரக் குறிப்பினை உரிய சான்றிதழ்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.