சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரைத் தாக்கிய 3 பேர் மீது சனிக்கிழமை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
  காரைக்குடியைச் சேர்ந்தவர் அசோகன் (58). இவர் திருப்பத்தூர் அருகே ஆத்திக்காடு தெக்கூரிலுள்ள எஸ்.வி.கே. மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக தெக்கூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். 
  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அருகில் உள்ள சோழம்பட்டி கிராமத்திற்கு செல்வதற்காக வழி கேட்டுள்ளார். இவரும் இந்த வழியாக செல்ல வேண்டும் என கூறியுள்ளார். 
  அந்த இளைஞர் சிறிது தூரம் சென்று திரும்பி வந்து, நீங்கள் எங்கே போக வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியர், காரைக்குடிக்கு போக வேண்டும் என கூறியுள்ளார். 
  அந்த இளைஞர், நான் அந்த வழியாகத்தான் போகிறேன் உங்களை இறக்கி விடுகிறேன் என்று கூறியதும், தலைமை ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். இவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன், பின் தொடர்ந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 2 இளைஞர்கள், தலைமை ஆசிரியரிடம் இருந்த பையை பறித்துள்ளனர். அப்போது தலைமை ஆசிரியரை ஏற்றிச்சென்ற நபரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். 
  அப்போது திடீரென தலைமை ஆசிரியரை வாகனத்தில் அழைத்து வந்த நபரின் செல்லிடப்பேசி கீழே விழுந்துள்ளது. அதனை தலைமையாசிரியர் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துள்ளார். அதனைத் தருமாறு கேட்டு, அவர்கள் கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் ஓடி வர 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் தலையில் படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் அசோகன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது புகாரின் பேரில் கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai