திணையத்தூரில் குடியரசு தின கபடி: முள்ளிமுனை அணிக்கு கோப்பை
By DIN | Published On : 29th January 2019 01:02 AM | Last Updated : 29th January 2019 01:02 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே திணையத்தூரில் நடைபெற்ற கபடி போட்டியில் முள்ளிமுனை வெண்புறா அணியினர் வெற்றி பெற்றனர்.
திருவாடானை தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் 70 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாள்கள் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளின் முடிவில் முதலிடம் பெற்ற முள்ளிமுனை முல்லை வெண்புறா கபடிக் குழுஅணி வெற்றிக்கான கோப்பையையும் ரொக்க பரிசையும் பெற்றது.
இரண்டாவது பரிசை புதுபட்டினம் ஸ்டீபன் ராஜா கபடிக்குழுவும் மூன்றாவது பரிசை கீழ்க்குடி கேப்டன் மன்ற கபடிக் குழுவும் நான்காவது பரிசை திருவெற்றியூர் கபடி குழுவினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு திருவாடானை தெற்கு ஒன்றியச் செயலாளர் ரெகுநாதன் பரிசுகளை வழங்கினார். விழாவில் ராமநாதபுரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராமனாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கைகாட்டி ராஜன், ராமநாதபுரம் மாவட்ட கேப்டன் மன்றச் செயலாளர் கோபிநாத் மற்றும் தேமுதிக ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.