வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடம் ரூ.4.66 கோடி மோசடி: மேலும் ஒருவர் கைது
By DIN | Published On : 29th January 2019 01:04 AM | Last Updated : 29th January 2019 01:04 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடம் ரூ.4 கோடியே 66 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிவகங்கை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ராமதாஸ்(60). குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளையான்குடியை சேர்ந்தவர் அஷ்ரப்அலி(எ) அப்துல் அஜீஸ். இவரும் குவைத்தில் வேலை செய்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த ரவி(46) என்பவரை சாமியார் என அப்துல் அஜீஸ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து, சிவகங்கையில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று ராமதாஸிடம் கூறி பல தவணைகளில் ரூ.4 கோடியே 66 லட்சத்தை ரவி பெற்றாராம். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஆசிரமம் மற்றும் பணம் குறித்து ராமதாஸ் கேட்டதற்கு ரவி சரிவர பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் ராமதாஸ் புகார் அளித்தார்.
எஸ்பி உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரவி, அவரது மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன், அஷ்ரப் அலி(எ) அப்துல் அஜீஸ், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையைச் சேர்ந்த தேவா(எ) பொன்னியப்பன் உள்ளிட்டோர் ராமதாஸிடம் மட்டுமின்றி, திருச்சியைச் சேர்ந்த சுப்பரமணியன் என்பவரிடமும் ரூ.40 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ரவி, அவரது மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன்,அஷ்ரப் அலி(எ)அப்துல் அஜீஸ், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையைச் சேர்ந்த தேவா(எ) பொன்னியப்பன் ஆகிய ஆறு பேர் மீதும் வழக்குப் பதிந்து, ரவியை கடந்த நவம்பர் (2018) மாதம் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவரான மோதீஸ்வரன் கோவையில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோதீஸ்வரனை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.