கீரனூர் மேம்பாலப் பணி விரைவில் தொடங்கப்படும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல்
By DIN | Published On : 01st July 2019 02:29 AM | Last Updated : 01st July 2019 02:29 AM | அ+அ அ- |

திருச்சி - காரைக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட கீரனூர் மேம்பாலப் பணி விரைவில் தொடங்கப்படும் என, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காரைக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் மேம்பாலப் பணி சில காரணங்களால் முடிவடையாமல் உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதைத் தவிர்க்க, மேம்பாலப் பணியை பூர்த்தி செய்யவேண்டும் என சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது தற்போது கைகூடியுள்ளது.
கீரனூர் மேம்பாலம் மீதமுள்ள பணியை முடிக்கவும், தொடர்ந்து சாலையை பழுது பார்த்து பராமரிப்பதற்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எனவே, அடுத்த ஒரு மாதத்தில் பணி தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மேலூர் - பிள்ளையார்பட்டி வழித்தடத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
என்றார்.