நீதிமன்றத்துக்கு எதிராக ஊடகங்கள் விமர்சனம்: திருப்பத்தூர் வழக்குரைஞர்கள் கண்டனம்

சமூக ஊடகங்களில் நீதிபதி மற்றும் நீதிமன்றத்தை விமர்சிப்பதை கண்டித்து திருப்பத்தூர் வழக்குரைஞர் சங்கத்தினர் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றினர்.

சமூக ஊடகங்களில் நீதிபதி மற்றும் நீதிமன்றத்தை விமர்சிப்பதை கண்டித்து திருப்பத்தூர் வழக்குரைஞர் சங்கத்தினர் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றினர்.
 இச்சங்கத்தின் தலைவர் எம்.ராஜசேகர் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த ஜூன் 27 இல் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனையின்போது, நீதிமன்ற அவமதிப்புடன் செயல்பட்ட வழக்குரைஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரின் சட்ட விரோத செயல்களைக் கண்டித்தும், அச்செயலை ஆதரிக்கும் விதமாக சில சமூக ஊடகங்களில் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் பரப்புவதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் திருப்பத்தூரில் அனுமதியின்றி துண்டுபிரசுரம் விநியோகித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருவரும் ஜூன் 27 ஆம் தேதி ஆஜரானபோது அரசு மதுபானக்கடை குறித்து அவர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அப்போது நீதிமன்றம் குறுக்கிட்டு வழக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேட்க வலியுறுத்தியது. ஆனால் இருவரும் நீதிமன்றத்தை விமர்சித்து கூச்சலிட்டதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 கண்டன கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் முருகேசன், பொருளாளர் எஸ்.முகமதுவாசிம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com