அஞ்சலகத்தில் மாதம் ரூ.210 செலுத்தி ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் பெறலாம்: காரைக்குடி கோட்ட புதிய கண்காணிப்பாளர் தகவல்
By DIN | Published On : 03rd July 2019 07:05 AM | Last Updated : 03rd July 2019 07:05 AM | அ+அ அ- |

அஞ்சலகத்தில் 18 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்கள் மாதந்தோறும் ரூ. 210 முதல் ரூ.1,454 வரை செலுத்தி மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம், ரூ. 8.5 லட்சம் பெறும் வசதி உள்ளதாக காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.
காரைக்குடி, தேவகோட்டை நகர் பகுதிகள், கிராமப்புறப்பகுதிகளை உள்ளடக்கியது காரைக்குடி அஞ்சல் கோட்டம். இக்கோட்டத்தின் கண்காணிப்பாளராக அண்மையில் ஆர். சுவாமிநாதன் பொறுப்பேற்றார். இந்நிலையில், திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் காரைக் குடியில் நகர்புற அஞ்சலகங்கள் 23-ம், கிராமப்புற அஞ்சலகங்கள் 52-ம், தேவகோட்டையில் நகர்புற அஞ்சலகங்கள் 16-ம், கிராமப்புற அஞ்சலகங்கள் 25-ம் என செயல்பட்டு வருகின்றன. ஆதார் அட்டையில் பிழைகள் இருந்தால் அதனை அஞ்சலகங்களில் சரி செய்து கொள்ளும் வசதி உள்ளது. அஞ்சலங்களில் சேமிக்கவும், காப்பீடு செய்யவும் பொதுமக்களை ஊக்கப்படுத்தி வருறோம்.
அடல் பென்சன் யோஜனா முதலீடுத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுவரையுள்ளவர்கள் பயன்பெறலாம். இதில் மாதந்தோறும் 18 வயதுக்கு ரூ. 210-ம் (42 ஆண்டுகள்),20 வயதுக்கு ரூ. 240-ம் (40 ஆண்டுகள்),25 வயதுக்கு ரூ. 376-ம் (35 ஆண்டுகள்), 30 வயதுக்கு ரூ. 577-ம் (30 ஆண்டுகள்), 35 வயதுக்கு ரூ. 902-ம் (25 ஆண்டுகள்), 40 வயதுக்கு ரூ. 1,454-ம் (20 ஆண்டுகள்) செலுத்தினால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம், முதிர்வுபெறும்போது வாரிசுக்கு ரூ. 8.5 லட்சம் கிடைக்கும். இதற்காக அஞ்சலகத்தில் சேமிப்புக்கணக்கு முதலில் தொடங்கவேண்டும். பிரீமியத்தொகை சேமிப்புக் கணக்கிலிருந்து "ஆட்டோ டெபிட்' வசதி மூலம் கழித்துக்கொள்ளப்படும்.
மேலும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுத்திட்டம் கிராமப்புற பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்டுவருகிறது. ரூ. 1 லட்சத்திற்கான காப்பீடு தொகை. மாதாமாதம் பிரீமியம் செலுத்தவேண்டும். இதில் 20 வயது முதல் 40 வயது வரையுள்ள வர்கள் பயனடையலாம். இதன் முதிர்வு தொகை அதிக பட்சமாக ரூ. 3 லட்சமும், குறைந்த பட்சமாக ரூ. 2 லட்சமும் பெற முடியும். இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் பிரிமியம் செலுத்தும் வசதி உள்ளது.
பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்துக் காப்பீடு, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீடு போன்ற பயனுள்ள காப்பீடு திட்டங்கள் உள்ளன என்றார்.