திருப்புவனம் அருகே மழை வேண்டி புரவி எடுப்பு விழா
By DIN | Published On : 05th July 2019 09:26 AM | Last Updated : 05th July 2019 09:26 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே மழை வேண்டி செவ்வாய்க்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
கலியாந்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். அதைத் தொடர்ந்து இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு திருப்புவனத்துக்கு வந்தனர். அதன்பின் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் தெய்வங்களின் உருவச்சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தவர்கள் புரவிகளையும் பொம்மைகளையும் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். வெள்ளக்கரை, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாகச் சென்ற இந்த புரவிகளுக்கு கிராம மக்கள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் கலியாந்தூர் சென்றடைந்த புரவிகள் அங்குள்ள கண்மாய்கரை அய்யனார் கோயில் முன்பு இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.