ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
By DIN | Published On : 08th July 2019 02:01 AM | Last Updated : 08th July 2019 02:01 AM | அ+அ அ- |

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டணி அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தல் காரணமாக நடப்பாண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்த இயலாமல் போனது. இருப்பினும் தற்போது கலந்தாய்வு நடத்துவதற்கு பதவி வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வட்டாரக் கல்வி அலுவலர்களுகக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ஆம் தேதியும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஜூலை 9ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் பணி நிரவல் ஜூலை 10 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஜூலை 11ஆம் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் 12ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஜூலை 13ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், ஜூலை 14 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்துக்குள் மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கான கலந்தாய்வு வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவரங்களும் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் விதி மீறல் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்.
அனைத்து வகை காலிப் பணியிடங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். இதுதவிர, கலந்தாய்வு நடக்கும் இடங்களில் குடிநீர், இருக்கைகள், கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.