நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மது ஒழிப்பு போராளி நந்தினி ஜாமீனில் விடுவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மதுஒழிப்பு போராளியும், வழக்குரைஞருமான

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மதுஒழிப்பு போராளியும், வழக்குரைஞருமான நந்தினிக்கு திருப்பத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மதுபானத்துக்கு எதிராக பிரசாரம் செய்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
அப்போது அனுமதி பெறாமல் துண்டுப் பிரசுரம் வழங்கக் கூடாது என போலீஸார் அவர்களை எச்சரித்துள்ளனர். இதனால் அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதனையடுத்து காவல் துறையினரை எதிர்த்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நந்தினி, காவலர் மணிகண்டனிடம் குறுக்கு விசாரணை செய்தபோது, மது உணவுப்பொருளா? அல்லது மருந்துப்பொருளா? என கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. 
இதனையடுத்து நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நந்தியினிடம் வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று  கூறியுள்ளார். இதை நந்தினி கேட்காமல் எதிர்த்துப் பேசியுள்ளார்.
 மேலும் நந்தினியின் தந்தை ஆனந்தன், போதைப்பொருள் விற்பதற்கு நீதிமன்றமே உடந்தையாக உள்ளது என்றும் கூச்சலிட்டாராம். 
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் மேல் விசாரணைக்கு நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். 
 மேலும் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும், போராடுவது சரிதான்; உங்களது போராட்ட முறை தான் தவறானது என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com