சுடச்சுட

  

   

  வாழ்வில் ஏற்படும் இன்னல்களை போக்க வல்ல அருமருந்தாக நல்ல புத்தகங்கள் திகழ்கின்றன என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர் அ.ஈஸ்வரன்  எழுதிய "நிழல் தராத மரங்கள்'  எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 

  இவ்விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ரமணி புனிதக்குமாரி தலைமை வகித்தார்.

  இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசியதாவது: இன்றைய பரபரப்பான போட்டி உலகில் கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான ஒன்றாக மாறி வருகிறது. படித்தல் என்பது வேறு, அறிதல் என்பது வேறு. ஆகவே கல்வி முறையை அறிவுக்கான களமாக மாற்ற வேண்டும்.

  கிராமப்புறங்களில் பெரும்பாலான குடும்பங்களில் கூட்டுக் குடும்பம் என்கிற நிலை அரிதாகி வருகிறது. இதனால் உறவுகளுக்கான புரிதலின்றி இன்றைய இளைய தலைமுறையின் நடவடிக்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வீட்டில் பெற்றோர்களை மட்டுமின்றி பெரியோர்களையும் மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். 
  போதிய பயிற்சியின்மையின் காரணமாக சிறு துன்பங்கள் ஏற்பட்டாலும்

  இளைஞர்கள் துவண்டு விடுகின்றனர். அதற்கு சமூக வலைதளங்களும் ஒரு காரணமாக திகழ்கிறது. வாழ்வில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது தான் எதார்த்த நிலை. இதனை புரிந்து கொண்டு தான் பயணத்தை தொடர வேண்டும் என அறிஞர்கள் பலர் கூறியிருக்கின்றனர். 

  கணினியில் நூல்களை பதிவிறக்கம் செய்து வாசிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதனால் எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நமது நினைவுத் திறனும் குறையும். நல்ல புத்தகங்களை தேடிப் படிக்க வேண்டும். வாழ்வில் ஏற்படும் இன்னல்களை போக்க வல்ல அருமருந்தாக நல்ல புத்தகங்கள் திகழ்கின்றன என்றார். 

  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நூலை வெளியிட, முன்னாள் அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் இளசை எஸ்.சுந்தரம் பெற்றுக் கொண்டார்.நூலக வாசகர் வட்டத் தலைவர் டி.என்.அன்புத்துரை நூலை அறிமுகம் செய்தார்.நூலாசிரியர் அ.ஈஸ்வரன் ஏற்புரை ஆற்றினார்.

  முன்னதாக மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்றார். 

  இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர்  பகீரத நாச்சியப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராமச்சந்திரன், நல்லாசிரியர் விருது பெற்ற கண்ணப்பன், அரிமா சங்கத் தலைவர் பாரதிதாசன், கூட்டுறவுத் துறை பதிவாளர் சதீஷ்குமார், ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் அனந்தராமன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், நூலக வாசகர் வட்டத்தின் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  மாவட்ட மைய நூலகர் போஸ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai