சுடச்சுட

  

  மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சியில் செயல் அலுவலர்களை உடனே நியமிக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 13th July 2019 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மானாமதுரை பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியில் இருந்த ஜான்முகமது பதவி உயர்வுபெற்று பல மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு செயல் அலுவலராக சென்று விட்டார். அன்றிலிருந்து மானாமதுரைக்கு செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளது. திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் கூடுதல் பொறுப்பாக மானாமதுரையையும் கவனித்து வருகிறார். இவர் தொடர்ந்து இங்குள்ள அலுவலகத்துக்கு வர முடியாத நிலையில் வாரத்தில் சில நாள்கள் மட்டும் வந்து விட்டுச் செல்வதால் மானாமதுரை பேரூராட்சியில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்படுவதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
   நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்படாத நிலையில் இப்பேரூராட்சியில் வரி இனங்கள், கட்டட வரைபடங்களுக்கு அனுமதி, வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் பிரச்னை என பல வகையான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
   இதேபோல் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டதால் இங்கும் இதுவரை செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் இளையான்குடியை கூடுதலாக கவனித்து வருகிறார். மேலும் இங்கு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் பல மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு இடமாறுதலாகிச் சென்றதால் இப் பணியிடத்துக்கும் புதிதாக ஆள் நியமிக்கப்படாமல் இளையான்குடியில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். செயல் அலுவலர் இல்லாத நிலையில் இளையான்குடி பேரூராட்சி  அலுவலகத்திலும் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
  இதுகுறித்து பேரூராட்சித்துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: மானாமதுரை, இளையான்குடி  பேரூராட்சிகள் உள்பட மாவட்டம் முழுவதுமிருந்து 10 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளின் பல்வேறு அலுவல் தொடர்பான கோப்புகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருப்பில் உள்ளன. மேலும் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் பலர் கூடுதல் பொறுப்பாக மற்றொரு பேரூராட்சி அலுவலகத்திலும் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. இதனால் இந்த பேரூராட்சி அலுவலங்களில் வழக்கமாக நடைபெறும் அன்றாட பணிகள், மற்றும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நிறைவேற்றுவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 
  எனவே மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளில் விரைவில் செயல் அலுவலர்களை நியமிக்க பேரூராட்சி இயக்குநர், மண்டல உதவி இயக்குநர் ஆகியோர் நடடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai