சிங்கம்புணரியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விளையும் கொப்பரைத் தேங்காய்களை சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டத்தில் விளையும் கொப்பரைத் தேங்காய்களை சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம்  கிடைக்கும் பொருட்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளிடமிருந்து  கொப்பரை கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு அனுமதி மற்றும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 450 மெட்ரிக் டன் அரைவைக் கொப்பரை மற்றும் 50 மெட்ரிக் டன் பந்துக் கொப்பரை ஆக மொத்தம் 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கொள்முதல் விலை அரைவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ 95.21 எனவும், பந்துக் கொப்பரைக்கு ரூ.99.20 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்கப்பட வேண்டிய கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கொப்பரை தேங்காயின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வைக்கோல், தூசு, நார் போன்ற அயல்பொருள்கள் அதிகபட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். தென்னை விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விவர நகல்களுடன் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு 
செய்து தங்களது கொப்பரை தேங்காய்களை ஒப்படைக்கலாம். அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
 இக்கொள்முதல் பணி வரும் 2020 ஆம் ஆண்டு  ஜனவரி 6  வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com