அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி
By DIN | Published On : 19th July 2019 02:26 AM | Last Updated : 19th July 2019 02:26 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைஅருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில் வாழ்வியல் திறன் எனும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர்(பொறுப்பு) ஜோசப் இருதயராஜ் தலைமை வகித்து கண்காட்சியை தொடக்கி வைத்தார்.
இதில் ரத்த தானம், மதுவினால் ஏற்படும் தீமைகள், வளர் இளம் பருவம், நல்வாழ்வு போன்ற வாழ்வியல் திறன் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை தீட்டிய மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளியின் முன்னாள் மாணவர் முருகேசன், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.