காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து நகரத்தார் நேர்த்திக்கடன்
By DIN | Published On : 24th July 2019 07:04 AM | Last Updated : 24th July 2019 07:04 AM | அ+அ அ- |

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி நகரத்தார் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடிமாதத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நகரத்தார் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனுக்கு பால்குடம், அக்னிச்சட்டி, காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
காரைக்குடி நகரச்சிவன் கோயிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் அம்மன் சன்னதி, செக்காலைச்சாலை, கண்ணுப்பிள்ளை தெரு, முத்தூரணி, முத்துப்பட்டிணம் வீதி வழியாக முத்து மாரியம்மன் கோயிலை அடைந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் காரைக்குடி, முத்துப்பட்டிணம் பகுதி நகரத்தார்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பிரதீபா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.