வேட்டங்குடியில் சரணாலயம் உண்டு; பறவைகள் இல்லை: அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயப் பகுதியில் உள்ள கண்மாய் பெரும்பாலும்

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயப் பகுதியில் உள்ள கண்மாய் பெரும்பாலும் வறண்டு காணப்படுவதால் அங்கு பறவைகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடிபட்டி, கொள்ளுகுடிபட்டி, சின்ன கொள்ளுகுடிபட்டி ஆகிய மூன்று கிராமங்களின் ஒருங்கிணைந்த கண்மாய் பகுதியே வேட்டங்குடி பறவைகள் சரணாலயமாக உள்ளது. இது கடந்த 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழக வனத் துறை கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருந்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழையின் போது பெய்யும் மழை நீரை அடிப்படையாக கொண்டு நவம்பர்,டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் சரணாலயத்தில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கும். இவை தவிர, ஐரோப்பா, வடக்கு ஆசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், கருநீல அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நீர்க்குளிப்பான், நத்தைக் கொக்கு, சாம்பல் நாரை, உன்னிக்கொக்கு, பனங்காடை உள்பட 200-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்து செல்லும்.
 இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் கண்மாய் பகுதி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் பறவைகள் சரிவர வருவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 மேலும் பறவைகள் பயன்பெறும் வகையில் கண்மாய்களில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கவும், கூடுதல் மரங்கள் நட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அடிப்படை வசதிகளான கழிப்பிடம் அமைத்து தரவும், சேதமடைந்துள்ள சிறுவர் பூங்கா ஆகியவற்றை சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொள்ளுகுடிபட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணி கூறியது: 
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் நடைபெற்ற வேளாண் பணிகளால் எண்ணற்ற உள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்தன. அவ்வாறு வந்த பறவைகளை எங்கள் முன்னோர்கள் தொந்தரவு செய்யாததால், அவை அனைத்தும் குறிப்பிட்ட சில மாதங்கள் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எங்கள் ஊரில் உள்ள கண்மாய் பகுதியில் தங்க ஆரம்பித்தன.
பறவைகளின் நலன் கருதி எங்கள் பகுதி கிராமப் பொதுமக்கள் தீபாவளி மற்றும் பண்டிகை கால விழாக்களில் கூட இன்று வரை பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் மேளதாளங்கள் இசைப்பதும் இல்லை. 
தற்போது தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் (சரணாலயப்பகுதி) பகுதியில் மழையின்மை காரணமாகவும், பெரும்பாலான பகுதி தற்போது சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாலும், ஏற்கெனவே உள்ள நாட்டுக் கருவேல மரங்கள் அழியும் நிலையில் உள்ளது.
இதன்காரணமாக சரணாலயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பறவைகள் தான் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் பறவைகளும் அதிக நாள்கள் தங்குவதில்லை. இதன் காரணமாக பறவைகள் சரணாலயத்தை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு கண்மாய் பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற முன்வர வேண்டும். பின்னர் கண்மாய் பகுதியில் வளரக் கூடிய மாற்று மரங்களை கூடுதலாக நடவு செய்ய வேண்டும். பெரியாறு பிரதான கால்வாயை சீரமைத்து, கொள்ளுகுடிபட்டி கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளான சாலை, கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com