காரைக்குடி அருகே இரு தரப்பினரிடையே மோதல்: போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: டி.எஸ்.பி. உள்பட 4 போலீஸார் காயம்; 58 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற போலீஸார் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதில் டி.எஸ்.பி. உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.  இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் மயானப் பகுதியில் ஒரு பிரிவினர் அமைத்த முள் வேலியை சிலர் சிதைத்து, கல்லறை ஒன்றையும் சேதப்படுத்தினராம். இதுகுறித்து சுப்பையா என்பவர் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மற்றொரு பிரிவைச் சேர்ந்த சீனிவாசன் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 இந்நிலையில், கோட்டையூர் வசந்த மாளிகை பேருந்து நிறுத்தம் அருகே  ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.
 இதில் காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரத்தின் தம்பி சுப்பையா, அவரது மகன் ஹரி ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. சுப்பையா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இத்தகவல் பரவியதை அடுத்து இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் மூண்டது. கற்களாலும், கட்டைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 
தகவறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வன்முறையை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது  போலீஸார் மீதும் சிலர் கற்கள் மற்றும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியதில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் மற்றும் 3 போலீஸார் காயமடைந்தனர். 
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். மேலும் கலவரம் பரவாமல் இருக்க கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே பள்ளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினரும் புகார் செய்தனர். இதில் ஒரு பிரிவினரைச் சேர்ந்த விக்னேஷ் உள்பட 30 பேரையும், மற்றொரு பிரிவினரில் சீனி என்பவர் உள்பட 28 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். 
இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com