மானாமதுரை வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த ஆட்சியர் உத்தரவு: அதிகாரிகள் தாமதிப்பதாகப் புகார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் உத்தரவிட்டும், அதிகாரிகள் ஏலம் நடத்துவதில் தாமதம் செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
       மானாமதுரையில் வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். சந்தைக்கு பொருள்களை விற்க வரும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம், பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் நடத்தி கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கும் குத்தகைதாரரிடம் சந்தை ஒப்படைக்கப்படும். 
     கடந்த முறை கடும் போட்டி நிலவியதன் காரணமாக, ரூ. 86 லட்சம் வரை சந்தை ஏலம் போனது. குத்தகை காலம் முடிந்ததும், பேரூராட்சி நிர்வாகம்  சந்தையில் வியாபாரிகளிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கும். இதனால், வாரந்தோறும் வியாழக்கிழமை மானாமதுரை பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் சந்தையில் வசூல் பணியில் ஈடுபடுவதால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
     அதையடுத்து, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி, மானாமதுரை வாரச் சந்தைக்கு பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றபோது, ரூ.56 லட்சத்துக்கு  ஏலம் போனது. இந்த தொகை, கடந்த முறை கிடைத்த தொகையை விட ரூ. 30 லட்சம் குறைவாகும். இந்நிலையில், ஏலம் நடந்து முடிந்து 4 மாதங்களாகியும் இதுவரை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்காமல், பேரூராட்சிப் பணியாளர்களே சந்தையில் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஏலத் தொகை ரூ. 30 லட்சம் குறைவாக இருப்பதால், மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டதாக, பேரூராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
     ஆனால், பேரூராட்சி நிர்வாகம் அளித்த பதிலில் மாவட்ட ஆட்சியர் திருப்தியடையாததால், ஏலதாரருக்கு சந்தையை ஒப்படைக்க ஆட்சியர் ஒப்புதல்  வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
      இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கேட்டபோது,  கடந்த முறையைக் காட்டிலும் ரூ. 30 லட்சம் குறைவாக சந்தை ஏலத்துக்கு போயுள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மறுஏலம் நடத்த பேரூராட்சித் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மறுஏலம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பேரூராட்சி நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. 
      இது குறித்து பேரூராட்சி வட்டாரத்தில் கேட்டபோது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை வாரச்சந்தை ஏலம் பிரச்னை குறித்து ஆட்சியரிடம் கேட்டார். அதற்கு, மறுஏலம் நடத்த உத்தரவிட்டுள்ளேன் என ஆட்சியர் பதிலளித்தார். ஆனால், அதற்கான முறையான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்ததும் வாரச் சந்தைக்கு மறுஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com