மானாமதுரையில் சார்பு-நீதிமன்ற கட்டடத்தை மாவட்ட நீதிபதி ஆய்வு
By DIN | Published On : 25th June 2019 07:24 AM | Last Updated : 25th June 2019 07:24 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மாவட்ட சார்பு-நீதிமன்றம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டடத்தை, மாவட்ட நீதிபதி திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மானாமதுரையில், சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் தற்போது உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட சார்பு-நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நிலையில் உள்ள வழக்குகள், சிவகங்கையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. எனவே, மானாமதுரையில் சார்பு-நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அண்ணா சிலை அருகே கோவிலூர் மடத்துக்குச் சொந்தமான கட்டடம் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ள போதிலும், இதுவரை நீதிமன்றம் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை மானாமதுரை வந்த மாவட்ட தலைமை நீதிபதி கார்த்திகேயனை, உள்ளூர் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். அதையடுத்து அவர், கோவிலூர் மடத்துக்குச் சொந்தமான கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கட்டடத்தில் நீதிமன்றம் செயல்படுவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் வழக்குரைஞர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர், மானாமதுரையில் சார்பு-நீதிமன்றம் அமைக்க கட்டடம் தயார் நிலையில் இருப்பதாகவும், இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி விரைவில் நீதிமன்றம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாகவும், வழக்குரைஞர்களிடம் உறுதியளித்துவிட்டுச் சென்றார்.