சுடச்சுட

  

  மானாமதுரை வைகையாற்றில் புதிய தரைப் பாலம்: திட்ட மதிப்பீடு தயாராகிறது

  By DIN  |   Published on : 26th June 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்வது தொடர்பாக எம்எல்ஏ மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர். 
   மானாமதுரையில் குண்டுராயர் தெரு, அண்ணாசிலை பகுதிகளை இணைக்கும் வகையில் ஏற்கெனவே உயர் மட்டப் பாலம் உள்ளது.இந் நிலையில் மானாமதுரை கன்னார்தெரு பகுதி- பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகையாற்றுக்குள் கூடுதலாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரசாரத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தரைப்பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். 
   இந் நிலையில் மானாமதுரை வைகையாற்றுக்குள் மேற்கண்ட பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி நெடுஞ்சாலைத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
   இதையடுத்து மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவிப் பொறியாளர் முத்து ஆகியோர் வைகையாற்றுக்குள் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர். 
   இது குறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், பாலம் அமைக்கும் திட்டத்துக்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பாலம் அமையவுள்ள திட்டத்தை முதல்வர் அறிவிப்பார். அதன்பின் விரைவில் பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். 
   இந்த ஆய்வின்போது அதிமுக நகர்ச் செயலாளர் விஜி.போஸ், நகர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ், இளையான்குடி ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai